#NortheastMonsoon | சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து #DyCM உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!
சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 3-வது வாரத்தில் இருக்க வாய்ப்புள்ளதாகவும், 4வது வாரத்தில் மழை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் இந்த 3 மாதங்களுக்கு மழை பொழிவு இருக்கும் எனவும், வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வடதமிழகத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென்தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் சென்னை, மற்றும் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் கடுமையாக பாதிக்கப்பட்டன. எனவே இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், அக்.15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும் எனவும், தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமை செயலகத்தில் இன்று (அக். 5) காலை 11 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு மண்டலம் வாரியாக மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து துணை முதலமைச்சரிடம் விளக்கமளித்தனர்.