Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டறைகள்!

05:21 PM Nov 15, 2023 IST | Web Editor
Advertisement

அனைத்து மாநகரம், மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு சிறப்பு கட்டுப்பாட்டறைகள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும், மழைப்பொழிவின் அளவு, அணைகளின் நீர்மட்டம் போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக 19.09.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் அனைத்து துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அரசுத்துறைகள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படவேண்டும், மக்களுக்கு எவ்வாறு உதவிகளை செய்ய வேண்டும் என்ற சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

அந்த அறிவுரையின்படி, வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்மந்தமாக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் ஒரு சுற்றறிக்கையை அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில்,

”தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினருக்கு வெள்ளப்பெருக்கு மற்றும் புயலால் ஏற்படும் பேரிடர்களை எதிர் கொள்வதற்கான ஒத்திகைப்பயிற்சி NDMA மற்றும் SDMA ஆணையங்களின் மேற்பார்வையில் 02.09.2023 அன்று சென்னை, செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் 30 இடங்களில் நடத்தப்பட்டது.

மேலும், கடந்த ஆண்டுகளில் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் தேவையான உபகரணங்கள் ரூபாய் 75 லட்சம் செலவில் வாங்கப்பட்டு பேரிடர் மீட்புக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளியின் மூலம் 17,305 காவல் ஆளிநர்களுக்கும், 1095 ஊர் காவல் படை ஆளிநர்களுக்கும் மற்றும் 793 தன்னார்வலர்களுக்கும் வெள்ளப்பெருக்கு, புயல், கனமழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது சம்மந்தமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கின் போது அதிகமான பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள், தாழ்வான பகுதிகள், கரையோர பகுதிகள் மற்றும் கடல் அரிப்பினால் பாதிக்கப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு காவல்துறை ஆளிநர்கள் உபகரணங்களுடன் தயார் நிலையில் பேரிடர் மீட்பு வைக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்குப் பருவமழைக்காக ADGP Operations அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டறை 24x7 மணிநேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டறையானது மாநில அவசரநிலை மையம் (SEOC), மாவட்ட அவசரநிலை மையங்கள் (DEOC) மற்றும் காவல்துறையில் உள்ள அனைத்து மாவட்ட, மாநகர கட்டுப்பாட்டறைகளுடனும் தொடர்பில் உள்ளது.

அனைத்து மாநகரம், மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு சிறப்பு கட்டுப்பாட்டறைகள் 24 மணி நேரமும் செயல்படும். இந்த கட்டுப்பாட்டறைகள் அனைத்து துறைகளுடன் குறிப்பாக தங்களின் எல்லைகளுக்குட்பட்ட காவல் நிலையங்களுடன் தொடர்பில் இருந்து அவ்வப்போது கிடைக்கப்பெறும் தகவல்களை பெற்று ADGP Operations-அலுவலகத்தில் உள்ள சிறப்பு கட்டுப்பாட்டறைக்கு அறிக்கை அனுப்பும். வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை கவனித்து அதற்கேற்றவாறு விரைந்து செயல்படும்.

மேலும், அந்தந்த எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் பெய்த மழைப்பொழிவின் அளவு, அணைகளின் நீர்மட்டம் போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் 24 மணி நேர அவசர உதவி எண்கள் 112, 1070, 94458 69843, 94458 69848 தொடர்பு கொள்ளலாம்.” இவ்வாறு தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags :
AlertChennai RMCCMO TamilNadudgpHeavy rainMetrological DepartmentMKStalinNews7Tamilnews7TamilUpdatesRainrain alertshankar jiwalTN GovtTN PoliceTNRainsWeather Update
Advertisement
Next Article