For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மீண்டும் பலூன்கள் மூலம் குப்பைகளை அனுப்பி அட்டூழியம் - தென்கொரியாவை வம்புக்கு இழுக்கும் வடகொரியா!

03:27 PM Jun 02, 2024 IST | Web Editor
மீண்டும் பலூன்கள் மூலம் குப்பைகளை அனுப்பி அட்டூழியம்   தென்கொரியாவை வம்புக்கு இழுக்கும் வடகொரியா
Advertisement

மீண்டும் தங்களுடைய நாட்டிற்கு 600 குப்பைகள் நிறைந்த பலூன்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்தி தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்து வருவது வழக்கம்.

இதனிடையே,  கடந்த 29-ம் தேதி ஏராளமான பலூன்களை தென்கொரிய எல்லைக்குள் வடகொரியா அனுப்பியதாக கூறப்படுகிறது. இரண்டு பலூன்களை ஒன்றாக இணைத்து அதில் குப்பைகளை கட்டி வடகொரியா அனுப்பியதாக தென்கொரியா தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள தென்கொரியா பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளன. அந்த பலூன்கள் சுமந்து கொண்டு வந்த பைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், பேட்டரிகள், ஷூ பகுதிகள், சாணம் இருந்ததாக தென்கொரிய அதிகாரிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த மனிதாபிமானமற்ற மற்றும் மிகவும் தரம் தாழ்ந்த செயலை உடனடியாக வடகொரியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என கடுமையாக எச்சரிக்கிறோம் எனவும் தென்கொரியா தெரிவித்திருந்தது. இந்நிலையில், தென்கொரியாவுக்கு மீண்டும் ஏராளமான பலூன்களில் குப்பைகளை கட்டி வடகொரியா அனுப்பியுள்ளது.இன்று காலை 10 மணி வரை, சுமார் 600 பலூன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 20 முதல் 50 பலூன்கள் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சிகரெட் துண்டுகள், குப்பைகள்,  துணிகள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழே விழும் பொருட்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும், வட கொரியாவில் இருந்து வந்தவை என்று சந்தேகிக்கப்படும் பொருட்களைத் தொட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு தென்கொரிய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற பொருட்களை கண்டால்,  ராணுவம் அல்லது போலீசாரிடம் தெரிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

Advertisement