சைவத்திற்கு பதில் அசைவ உணவு - வந்தே பாரத் ஊழியருக்கு கன்னத்தில் 'பளார்' விட்ட பயணி!
சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவை வழங்கிய ஊழியரை ரயில் பயணி ஒருவர் அறைந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ரயிலில் கேட்டரிங் மூலம் விநியோகிக்கப்படும் உணவுகளில் உணவின் தரம், சுவை சரியில்லை என பல பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால், கடந்த 26-ம் தேதி ஹவுராவிலிருந்து ராஞ்சிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலில் நடந்த சம்பவம் சற்று வித்தியாசமானது. அதில் சைவ உணவு முன்பதிவு செய்திருந்த பயணி ஒருவருக்கு, கேட்டரிங் ஊழியர் தவறுதலாக அசைவ உணவு பார்சலை வழங்கிவிட்டார்.
ஒவ்வொரு உணவு பாக்கெட்டின் மேல் அட்டையில் சைவம், அசைவம் என அச்சிடப்பட்டிருக்கும். அதைப் படித்துப் பார்க்காமல் சைவ உணவை ஆர்டர் கொடுத்திருந்த பயணி உணவு பாக்கெட்டை பிரித்து சாப்பிட்டார். அந்த உணவு அசைவம் என தெரிந்ததும், முதியவரான அந்த பயணிக்கு கடுங்கோபம் ஏற்பட்டது. உணவு விநியோகம் செய்த ஊழியரை அழைத்து விளக்கம் கேட்டார். அவர் தவறுதலாக கொடுத்துவிட்டேன் என கூறி மன்னிப்பு கேட்டார்.
எனினும் அந்தப் பயணி ரயில்வே ஊழியரை கன்னத்தில் இரு முறை அறைந்தார். இதைப்பார்த்த மற்ற பயணிகள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர். ஊழியருக்கு ஆதரவாக அடித்த ரயில் பயணியிடம் மற்ற பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊழியரிடம், ரயில் பயணி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு அந்த முதியவர் மறுத்ததால், அந்த ரயில் பெட்டியில் கடும் அமளி ஏற்பட்டது. சம்பவம் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மற்றும் கேட்டரிங் மேலாளர் ஆகியோர் வந்தனர்.
உணவு பார்சலை படித்துப் பார்க்காமல் சாப்பிட்டதும், அதற்காக ஊழியரை தாக்கியதும் தவறு என அவர்கள் முதியவரிடம் சுட்டிக்காட்டினர். ஆனால், அந்தப் பயணி தனது தவறை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து அனைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஊழியருக்கு ஆதரவாக பேசிய பயணி ஒருவர், அந்த முதியவரை அடிப்பதற்கு கையை ஓங்கினார். பின்னர் அந்த முதியவர் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தார்.