நான்-ஸ்டாப் To நேச்சுரல் ஸ்டார் - HBD Actor Nani...
‘நானி’ என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் நவீன் பாபு காண்டா. 1984, பிப்ரவரி 24-ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்த இவர், எதார்த்தமான நடிப்புத்திறனால் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்ததோடு ரசிகர்களால் “நேச்சுரல் ஸ்டார்” என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். சிறு வயதில் இருந்தே திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்த நானி நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்னர் உதவி இயக்குநராக பணியாற்றினார். பன்முகத் திறமைக் கொண்ட நானி ஆர்.ஜே-வாகவும் பணிபுரிந்து வந்தார்.
“நான்-ஸ்டாப் நானி” என்ற தனது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நானிக்கு நண்பராக இருந்தவர் ஆர்.ஜே.வாக இருந்த இயக்குநர் நந்தினி ரெட்டி. நந்தினி தான் நானி திரையுலகிற்கு அறிமுகம் ஆக முக்கிய காரணம். நந்தினி முதலில் விளம்பரங்களை இயக்கி வந்தார். அவர் இயக்கிய விளம்பரம் ஒன்றில் நடிக்கும்படி நானியிடம் கேட்க, அது நானியின் திரைப்பட பயணத்திற்கான தொடக்கமாக அமைந்தது. நந்தினி இயக்கத்தில் நானி நடித்த விளம்பரத்தை பார்த்த இயக்குநர் மோகன் கிருஷ்ணாவுக்கு, தனது படத்தில் நானியை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
2011-ம் ஆண்டு வெளியான “வெப்பம்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார் நானி. இத்திரைப்படத்தில் நா.முத்துக்குமார் வரிகளில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. 2012-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான “நான் ஈ” திரைப்படத்தில், கதாநாயகனாக நானி நடித்திருந்தப் பகுதி குறைவாக இருப்பினும், திரையுலகிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் அவரை பிரபலப்படுத்தியதோடு வெற்றியையும் தேடித்தந்தது.
அறிமுக இயக்குநரான கோபி கிருஷ்ணா இயக்கத்தில் நானி நடித்து 2014-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் “ஆஹா கல்யாணம்”. இது பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், நானியின் நடிப்புத் திறன் வழக்கம்போல் சிறப்பாக அமைந்தது. 2021-ம் ஆண்டு வெளியான “ஷியாம் சிங்கா ராய்” திரைப்படம் நானியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டத் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென தனி முத்திரையைப் பதித்தார் நானி.
இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி ரசிகர்களின் மனதில் நேச்சுரலான இடத்தையும் பிடித்துள்ளார் என்றால் அது மிகையல்ல.