ஆன்லைன் மோசடியால் ரூ.27 லட்சத்தை இழந்த நொய்டா பெண்! அவர் செய்தது என்ன?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாட்ஸ் அப்பில் வந்த அழைப்பை எடுத்துப் பேசியதால் பெண் ஒருவர் ரூ. 27 லட்சம் ரூபாயை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாள்தோறும் புதுபுது வகையில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலீசார் தரப்பில் எவ்வளவு விழிப்புணர்வுகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டாலும், மக்கள் ஏமாந்துதான் வருகின்றனர். அந்த வகையில் தற்போது நொய்டாவை சேர்ந்த 44 வயது பெண் போலி செய்தியை நம்பி ரூ.27 லட்சத்தை இழந்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்த பெண்ணுக்கு, கஸ்டமர் கேரிலிருந்து பேசுவதாக, வாட்ஸ்அப் கால் வந்துள்ளது. இ-சிம் அப்டேட் புதிதாக வந்திருப்பதால், அதனை ஆக்டிவ் செய்துகொண்டால், செல்போன் தொலைந்தாலும் எளிதாக சிம்கார்டு பெறலாம்; எண்களை இழக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதனை உண்மை என நம்பிய அந்த பெண், எதிரிலிருப்பவர் சொல்வதையெல்லாம் செய்திருக்கிறார். மேலும் ஒரு ஓடிபி கோடு வரும் அதனை பதிவிடுங்கள் என கூறியதும், அவரும் பதிவிட்டுள்ளார்.
உடனே மொபைல் செயலிழந்துள்ளது. மொபைல் போன் செயலிழந்த போதும், சிம் கார்டு 1ஆம் தேதி வந்துவிடும் என என நினைத்து இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். பின்னர் செப்.1ஆம் தேதி புது சிம்கார்டு வாராததையடுத்து, தனது செல்போன் வாடிக்கையாளர் மையத்திற்கு போன் செய்துள்ளார். அவர்கள் இந்த பெண்ணிண் பிரச்னை என்ன என்பதை அறியாமல், அதே நம்பருக்கு புது சிம்கார்டை அப்ளை செய்யுமாறு கூறியுள்ளனர். புது சிம்கார்டும் விண்ணப்பித்து பெற்றுள்ளார்.
சிம் கார்டை செல்போனில் போட்டதும் அவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவல்களில், அவரது வைப்புத் தொகைகள் எடுக்கப்பட்டு விட்டன. இரண்டு வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணமும் எடுக்கப்பட்டுவிட்டது. அவரது பெயரில் செயலிகள் மூலம் ரூ.7.40 லட்சம் அளவுக்கு கடன் பெறப்பட்டுள்ளது என்று குறுந்தகவல்கள் வந்துள்ளன.
பின்னர் போலீஸில் புகார் அளித்ததில், செல்போன் மூலமாக மின்னஞ்சல் முகவரியை கண்டுபிடித்து அதன் மூலம் அப்பெண்ணிடமிருந்து ரூ.27 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.