வேதியலுக்கான #NobelPrize அறிவிப்பு... யார் யாருக்கு தெரியுமா?
2024-ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலர்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன.
கடந்த 1901-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை நிறுவியவர் ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல். வேதியியல், பொறியியலில் நிபுணரான இவர், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தார். தனது கண்டுபிடிப்பின் மூலம் பெரும் செல்வந்தரான இவர் அறிவியல் கண்டுபிடிப்புகளை கெளரவிக்கும் வகையில் நோபல் பரிசை நிறுவினார். அவரது நினைவு தினமான டிச 10-ம் தேதி பரிசு வழங்கப்படும்.
அந்த வகையில், மருத்துவம், இயற்பியல் துறைகளுக்கான நோபல் பரிசு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று (அக். 9) வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த இருவருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், 'கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக' டேவிட் பேக்கருக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும், 'புரத கட்டமைப்பு குறித்த கண்காணிப்பு ஆராய்ச்சிக்காக' டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய இருவருக்கும் மீதி பாதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.