"அரசியலில் எந்த ஸ்டண்டும் எடுபடாது" - விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி வீடு வீடாக சென்று 'ஒன்றிணைவோம் தமிழ்நாடு' என்ற திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை நடத்தும் முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,
"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தார்மீக உரிமை கிடையாது. அவரது ஆட்சியில் தூத்துக்குடியில் மக்களை
சுட்டுக் கொண்டார்கள். அது குறித்து கேட்டபோது நான் தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொல்லக்கூடிய அளவில் தான் முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு முதலமைச்சர் நாகரிகம் உள்ளவர். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தருபவர். இறந்து போன அஜித்குமாரின் குடும்பத்திற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில் ஆறுதல் சொல்ல வேண்டியது அவரது பணி, அவரது கடமை. அதை உணர்ந்து செயலாற்ற கூடியவர் தமிழ்நாடு முதலமைச்சர்" என்றார்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் உயிரிழந்த அஜித்குமார் இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அரசியலில் எந்த ஸ்டண்டும் எடுபடாது. ஏனென்றால் நாங்கள் மக்களின் மனதில் இருக்கின்றோம். மக்களுடைய மனதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் பொழுது வேறு எந்த ஸ்டெண்டும் எடுபடாது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இதுவரை தோல்வி கண்ட எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தோல்வியை காண்பார். நாங்கள் எடுத்திருக்கின்ற நடவடிக்கைகள் இன்னும் எங்களின் பலத்தை அதிகரித்திருக்கிறது தவிர நாங்கள் பலவீனமாக ஆகவில்லை. எங்களின் பலம் அதிகரித்துள்ளது. பாஜகவால் எதுவும் செய்ய முடியாது. அவர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவர்கள் யாரையும் திரட்ட ஓரணியில் முடியாது.
அவர்கள் ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுகவின் முயற்சியை விமர்சிப்பது ஆச்சரியமான ஒன்று அல்ல. அவர்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள். அதனையும் மீறி தமிழ்நாடு மக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பின்னால் இருக்கிறார்கள். பாஜகவுக்கு பின்னால் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவது தான் ஓரணியில் தமிழ்நாடு என்பதன் முக்கிய நோக்கம். எங்களுக்கு எதிரிகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவில் இல்லை. அதே நேரத்தில் எதிரிகளை சமாளிக்கின்ற சக்தியும், ஆற்றலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது" என்றார்.