தமிழ்நாட்டில் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி!
தமிழ்நாடு முழுவதும் 207 பள்ளிகள் மூடப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டவட்டமாகத் தெரிவித்தார். மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் பள்ளிகளிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எந்தச் சூழலிலும் பள்ளிகள் மூடப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.
ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில், 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம், நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள், பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் தொடக்க விழா சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, திருவெறும்பூர் தொகுதியில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்தொகுதியில் உள்ள 64 நியாய விலைக் கடைகளில், 4,268 குடும்ப அட்டைதாரர்களுக்கு இத்திட்டம் பயன் அளிக்கிறது. முதல் கட்டமாக 52 வாகனங்கள் மூலம் இன்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
திருவெறும்பூர் தொகுதியில், மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கூட்டுறவுத் துறை ஊழியர்கள் வாகனங்கள் மூலம் வீடுகளுக்குச் சென்று பொருட்கள் விநியோகம் செய்வார்கள். புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை, பாமாயில், துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் நேரில் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் வெற்றி ஊழியர்களின் கையில் உள்ளது என்றும், யாரையும் விட்டுவிடாமல் பொருட்களை வழங்க அதிகாரிகள்தான் ஊழியர்களை வழிநடத்த வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து 'நலம் காக்கும் ஸ்டாலின்' மற்றும் 'உங்களுடன் ஸ்டாலின்' போன்ற பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார். இந்தத் திட்டம், தமிழ்நாடு முழுவதும் உள்ள 34,809 நியாய விலைக் கடைகள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.