கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை, நெருடலும் இல்லை -விசிக தலைவர் #Thirumavalavan!
திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை, எந்த நெருடலும் இல்லை விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தும் வகையில், மது ஒழிப்பு மாநாட்டை கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ந்தேதி நடத்துகிறார்.
இந்த மாநாடு தி.மு.க கூட்டணிக்கு அரசியல்ரீதியாகவும், ஆட்சிரீதியாகவும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று விமர்சனம் எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில், சீட் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காக திருமாவளவன் நடத்தும் அரசியல் என்றும், அ.தி.மு.க கூட்டணிக்கு செல்வதற்கான அரசியல் என்றும் இருவேறு விமர்சனங்கள் பொதுத் தளத்தில் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து, “கொள்கை வேறு; கூட்டணி வேறு. பேர அரசியல் எங்களுக்குத் தெரியாது. தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணம் சிறுத்தைகளுக்கு கிடையாது” என்றெல்லாம் திருமாவளவன் விளக்கமளித்திருக்கிறார். அரசியலில் அதிகாரம்; ஆட்சியில் பங்கு என்கிற திருமாவளவனின் முழக்கம் வேறு (பழையது என்றாலும் இப்போது ட்ரண்ட் ஆகிறது) கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு அறிவாலயத்தில் நடந்தது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:
"அமெரிக்காவில் பல ஆயிரம் கோடி முதலீடுகளை பெற்று சென்னைக்கு திரும்பியுள்ள முதலமைச்சரை இன்று நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தோம். தேசிய அளவிலும், தமிழ்நாட்டிலும் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
அதில் எங்களுக்கு உடன்பாடு உண்டு என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், உங்களது கோரிக்கையை இந்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம் என்றும், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார். மேலும் கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2ஆம் தேதி விசிக நடத்தும் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதி மற்றும் டி.கே.எஸ் இளங்கோவன் மாநாட்டில் பங்கேற்பார்கள் என முதலமைச்சர் உறுதியளித்தார்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கருத்து தொடர்பாக எந்த கருத்தையும் இந்த சந்திப்பில் பேசவில்லை. திமுக விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. எந்த நெருடலும் இல்லை. நாங்கள் கூட்டணியில் உறுதியாகவே இருக்கிறோம். தேர்தலுக்கும் முதலமைச்சருடனான சந்திப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.