Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ரயில் ஓட்டுநர்களுக்கு ஓய்வு இல்லை" - ரயில்வே அமைச்சரிடம் மனு அளித்த மார்க்சிஸ்ட் எம்பிக்கள்!

12:09 PM Jun 29, 2024 IST | Web Editor
Advertisement

ரயில் ஓட்டுநர்களுக்கு தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு மேல் இரவு பணி வழங்கப்படுவதால் விபத்துகள் அதிகரிப்பதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். 

Advertisement

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை,  தமிழ்நாட்டில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட  சு.வெங்கடேசன் மற்றும் சச்சிதானந்தம் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.  இது குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"இந்திய ரயில்வேயில் உள்ள லோகோ பைலட்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புப் பிரச்னைகளையும், தெற்கு ரயில்வேயில் உள்ள லோகோ பைலட்களின் போராட்டத்தையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

இந்திய ரயில்வேயில் மோதல்கள் உட்பட சமீபத்திய விபத்துக்களுக்கு பிற காரணங்களுடன் மனிதத்தவறு காரணமாக சுட்டிக் காட்டப்படும் வேளையில் லோகோ பைலட்டுகளின் பணி நிலைமைகளை சரிசெய்ய வேண்டிய அவசரத் தேவை எற்பட்டுள்ளது. பெரும்பாலும் சரக்கு ரயில் லோகோ பைலட்டுகள் ஒரு நாளைக்கு 14 முதல் 16 மணி நேரம் வேலை செய்கிறார்கள்; 3 அல்லது 4 நாட்கள் கழித்து வீடு திரும்புகிறார்கள்; தொடர்ந்து 4 இரவுகளுக்கு மேல் வேலை செய்கிறார்கள், அதன் பிறகும் வாராந்திர ஓய்வு சரியாக வழங்கப்படுவதில்லை.

தலைமையகத்தில் ஓய்வு இல்லாததால், சிவப்பு சிக்னலை கடக்கும் (சிக்னல் பாஸிங் அட் டேஞ்சர், SPAD) நிகழ்ச்சிக்கு வழி வகுக்கிறது, இது மோதல்களுக்கு இரண்டாம் காரணம். சிக்னல் செயலிழப்பும் செயலிழக்கும் போது செயல்பட வேண்டிய குழப்பமான உத்தரவுகள் முதன்மைக் காரணம். இந்திய ரயில்வேயில் 2022 -23 ல் மட்டும் 51 ஆயிரத்து 888 சிக்னல்கள் செயலிழந்து உள்ளன.

ஒரு நாளைக்கு 8 மணி நேரப் பணி என்பதை உறுதிப்படுத்தும் ஐஎல்ஓ மாநாடு முடிந்து 105 ஆண்டுகளுக்குப் பிறகும் லோகோ பைலட்டுகளுக்கு 8 மணி நேரப் பணியும், வாராந்திர ஓய்வும் கானல் நீராக உள்ளது. ரயில்வே வாரியத்தின் 1968 ஆம் ஆண்டு உத்தரவில், ரன்னிங் ஊழியர்களின் வேலை நேரம் 14 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் இன்னமும் அது எட்டாக்கனியாகவே உள்ளது.

விசாகப்பட்டினம் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தனது அறிக்கையில் “ஊழியர்கள் நான்கு இரவுகள் தொடர்ந்து பணியாற்றுவது பாதுகாப்பற்றது” என்று கூறியுள்ளார். தொடர்ச்சியான இரவுகள் இரண்டாக மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். லோகோ பைலட்டுகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே லோகோ பைலட்டுகள் தொடர் இரவுப்பணியை இரண்டாகக் குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்து ஊழியர்களுக்கும் வாராந்திர ஓய்வுக்கு உரிமை உண்டு அதேசமயம் லோகோ பைலட்டுகளுக்கு வாராந்திர ஓய்வுக்கு உரிமை இல்லை.  அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு நான்கு முறை 30 மணிநேரம் ஓய்வு கொடுப்பது நல்லது.  அது ஊழியர்களின் உரிமை மற்றும் பயணிகளின் நலன் சார்ந்தது.  ஆனால் விதியிலேயே பத்து நாளைக்கு ஒரு முறை ஓய்வு கொடுத்தால் போதும் என்று சொல்லப்பட்டுள்ளது. முழுமையான உண்மையான ஓய்வு என்பது பணி முடிந்த 16 மணிநேரத்திற்கு பிறகு தொடர்ந்து 30 மணிநேரமாக இருக்க வேண்டும்.

அதாவது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தலைமையக ஓய்வு 16 மணி நேரம் கழிந்த பிறகு, அவர்களுக்கு தொடர்ந்து 30 மணி நேரம் ஓய்வு அளிக்கப்பட வேண்டும், இது ரயில், லோகோ பைலட் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
அண்மையில் நடந்த மேற்குவங்க ரயில் மோதலில் கூட சரக்கு ரயில் ஓட்டுனர் நான்கு இரவுகள் தொடர்ந்து வேலை பார்த்து வெறும் முப்பது மணி நேர ஓய்வு மட்டும் எடுத்து வேலைக்கு வந்தது தெரிகிறது. இது போதுமான ஓய்வு இல்லை என்பதை விபத்துகள் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றன.

முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் நிர்வாகம் காட்டும் தொடர்ந்த அலட்சியத்தை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வேயின் லோகோ பைலட்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.  நிர்வாகத்தின் பாதுகாப்பற்ற அறிவுறுத்தல்களின்படி அவர்கள் பணிபுரிந்தால்,  விபத்துகளினால் பயணிகளின் உயிரிழப்பு மற்றும் தங்களின் உயிரையும் இழக்கிறார்கள். அவர்கள் உயிருடன் இருந்தால்,  அவர்களுக்கு பணிநீக்கம் தண்டனையாக விதிக்கப்படுகிறது.

தற்போது தெற்கு ரயில்வேயில் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றிய பல லோகோ பைலட்கள் இடமாற்றம், இடைநீக்கம், பெரிய மற்றும் சிறிய தண்டனை குற்றப்பத்திரிகைகளால் தண்டிக்கப்படுகிறார்கள். போராடும் ஏஐஎல்ஆர்எஸ்ஏ ( AILRSA ) தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பொது மேலாளரை வழிநடத்துவது தவிர, மனிதத் தவறுக்கான காரணத்தை நீக்கி பாதுகாப்பை உறுதி செய்ய தயவுசெய்து தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Loco PilotMaduraisu venkatesan
Advertisement
Next Article