"போர்க்களத்தில் நின்றுகொண்டு எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது!" - பிரதமர் மோடி
போர்க்களத்தில் நின்றுகொண்டு எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆஸ்திரியா புறப்பட்டு சென்றார். கடந்த 41 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா வந்திருப்பது இதுவே முதல்முறை. விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மர் மற்றும் முக்கியத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
உக்ரைன் போர், பயங்கரவாதத்துக்கு எதிராக உலகம் அணி திரள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் மற்றும் இரு நாட்டு ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடி, ஆஸ்திரிய பிரதமர் நெகம்மருடன் ஆலோசனை நடத்தினார். பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது, "போர்க்களத்தில் நின்றுகொண்டு எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது. அப்பாவி மக்களைக் கொல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.
இருநாட்டு நல்லுறவு குறித்து பேசப்பட்டது. இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி செய்யப்பட்டது. எதிர்காலத்தில் இரு நாடுகளும் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் விவாதிக்கப்பட்டன. இருநாடுகளுமே பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம். பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதனை ஏற்கக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது. அதனை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது" என்றார்.
இதனையடுத்து பேசிய ஆஸ்திரிய பிரதமர் நெகம்மர், "இரு நாடுகளுக்கும் இடையே மிகச் சிறந்த நட்பு உள்ளது. இந்த நட்புறவின் நம்பிக்கையானது 1950களில் உருவானது. 1955ல் ஆஸ்திரியாவுக்கு இந்தியா உதவியிருக்கிறது. ஆஸ்திரிய மாகாண ஒப்பந்தம் ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தையின்போது இந்தியா ஆதரவு அளித்தது. தற்போது உலகளவில் எழுந்திருக்கும் பிரச்னைகள் இரு நாடுகளுக்குமே கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன" என்றார்.
முன்னதாக ஆஸ்திரியாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மோடி, "ஆஸ்திரியா துடிப்பான இசைக் கலாச்சாரத்துக்கு பெயர் பெற்றது. வந்தே மாதரத்தின் அற்புதமான ஒரு இசையமைப்பு காண முடிந்தது" எனத் தெரிவித்துள்ளார்.