“10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் வரை மின்தடை கூடாது” - அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மாதாந்திர பராமரிப்புக்கான மின் நிறுத்தம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என தலைமை பொறியாளர்களுக்கு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் எதிர் வரும் கோடைகாலத்தின் போது தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சார விநியோகம் வழங்குவது குறித்து அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக்கூடம் நடைபெற்றது.
அப்போது, தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு தொடங்கி உள்ள நிலையில் தேர்வு கால முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புக்கான மின் நிறுத்தம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என தலைமை பொறியாளர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார்.
பகிர்மான வட்டங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் மின்தடங்கள்கள் ஏற்பட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.