ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சிகள் | #ElonMusk பதிவால் சர்ச்சை!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசை கொல்வதற்கு யாரும் முயற்சி கூட செய்யவில்லை என எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கி உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிருகிறார். தேர்தல் நெருங்கியுள்ளதை அடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில், புளோரிடா கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
இதனையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும், அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தோ்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்தபோது அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதும், அதில் அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஒருவர், டொனால்டு டிரம்ப்பை ஏன் கொல்ல முயற்சிக்கின்றனர்? என்று எக்ஸ் தள பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதனைப் பகிர்ந்த பிரபல உலக பணக்காரரும் டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் எலான் மஸ்க், “பைடன் மற்றும் கமலாவை கொல்வதற்கு யாரும் முயற்சிகூட செய்யவில்லை” என்று தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப்புக்கு, மஸ்க் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.