“வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம்” - முதலமைச்சர் பினராயி விஜயன்!
வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இத்துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முழுவதும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1000த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள், கடற்படை குழுவினர், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோரக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் தேடுதல்-மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். விமானப் படை ஹெலிகாப்டர்கள், ராணுவத்தின் மோப்ப நாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று (ஜூலை 31) திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுவரும் குழுவினருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரசியல் கட்சிகளுக்கு நாளை (ஆக. 1) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிவாரண உதவிகளை அளிக்க அழைப்பு விடுத்துள்ள முதல்வர் பினராயி விஜயன், வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர வேறு யாரும் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.