"தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை" - #ADMK முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிதுள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது விக்னேஷ் இளைஞர் மற்றும் மற்றொரு நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் ஆத்திரத்தில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மருத்துவரை தாக்கியதாக போலீசார் விசாரணையில் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து கிண்டி அரசு மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜி ஜெகன்நாதனை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:
“மருத்துவமனைக்கு ஆயுதத்தோடு வரும் நபரை ஏன் சோதனை செய்யவில்லை? Medical Council of India மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு வகுத்துள்ள விதிமுறைகள் மீது திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. அடிப்படை கட்டமைப்பு வசதி, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதிலும் இந்த அரசு தோல்வியடைந்துவிட்டது. மருத்துவர் மீதான தாக்குதலை அதிமுக ஏற்றுக்கொள்ளாது. எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல் மருத்துவர்கள் மீது நிகழாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசின் கடமை. தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் விரைவில் குணம்பெற்று பணிக்கு திரும்ப வேண்டும் என ஆறுதல் கூறியுள்ளோம்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிதுள்ளார்.