இந்தியாவிலேயே யாரும் சித்திரை முழு நிலவு மாநாட்டை போல் நடத்த முடியாது - அன்புமணி ராமதாஸ் பேச்சு!
தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த உறுப்பினரும் மாநில செயற்குழு உறுப்பினுமான கனல் ராமலிங்கம் என்பவர் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இன்று அவருடைய படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதற்காகவும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறவும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ள வருகை புரிந்தார். கடந்த 13 ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது.
அதற்குப் பிறகு எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொல்லாமல் இருந்த நிலையில் இன்று தருமபுரியில் நடைபெறும் கட்சியின் மூத்த உறுப்பினர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தார். அப்போது பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,
"பாமக சார்பில் நடைபெற்ற மாநாட்டை பார்த்து ஆளுங் கட்சி பொறாமை படுகின்றனர். கடந்த காலத்தில் நடந்த மரக்காணம் சம்பவத்தை வைத்துக்கொண்டு நான்கு வழக்குகள் பதியப்பட்டு அதை காரணம் காட்டி சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அனுமதி வழங்காமல் இருந்தனர். இந்தியாவிலேயே யாரும் இந்த மாநாட்டை போல நடத்த முடியாது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நினைத்திருந்தால் இட ஒதுக்கீட்டை வழங்கி இருக்கலாம். காவல்துறையில் ஒரேயொரு உயர் அதிகாரி வன்னியர் சமூகத்தை சார்ந்திருக்கிறார். ஆனால் அரசு சமூக நீதி என சொல்வது பொய்யான தகவல். இட ஒதுக்கீடு அன்றைக்கே கொடுத்திருந்தால் தற்போது 10 பேர் உயர் அதிகாரிகளாக வன்னியர் சமுதாயம் சார்ந்தவர்கள் இருந்திருப்பார்கள். 2026 யில் முதல் வெற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது அதற்குண்டான யுக்திகளை தங்களுக்கு தெரியும்" என பேசினார்.