“இங்கு யாரும் பிறப்பால் முதலமைச்சர் ஆகவில்லை” - ஆதவ் அர்ஜூனாவின் விமர்சனத்திற்கு உதயநிதி பதில்!
முதலமைச்சரை மக்கள்தான் தேர்ந்தெடுக்கின்றனர் என்ற அறிவு கூட ஆதவ் அர்ஜூனாவிற்கு இல்லையா என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாதான் தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில நாள்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இச்சூழலில் நேற்று இவ்விழா நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் “தமிழ்நாட்டில் மன்னாராட்சியை ஒழிக்க வேண்டும் எனவும், இனி பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக கூடாது. தமிழகத்தை கருத்தியலை பேசக்கூடிய தலைவர்கள் தான் ஆள வேண்டும்" என விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார்.

இது கூட்டணி கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது காரில் அமர்ந்தவாறு செய்தியாளரின் சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவரிடம் நேற்றைய விஜய் பேச்சு குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை” என பதிலளித்தார்.
தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் எனவும் பிறப்பால் ஒருவர் முதல்வராவதை தடுக்க வேண்டும் என பேசியது குறித்து அவரிடம் கேட்டதற்கு, "யார் இங்கு பிறப்பால் முதலமைச்சரானார், மக்கள் தேர்வு செய்ததாலேயே முதலமைச்சரானார். அந்த அறிவு கூட இல்லையா அவருக்கு...என்று பதிலளித்துள்ளார்.