“அஜித் மாதிரி வேறு யாரும் வர முடியாது” - மனம் திறந்த #DulquerSalmaan!
நான் நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன், அவர் மாதிரி யாரும் வரமுடியாது என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். அவரது நடிப்பில் வௌியான ‘சீதா ராமம்’ திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் ‘லக்கி பாஸ்கர்’.
வெங்கி அட்லுரி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கியுள்ளதை அடுத்து படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
அந்த வகையில், இப்படத்தில் இயக்குநர் வெங்கட் அட்லுரி, நடிகர் துல்கர் சல்மான் உள்ளிட்டோர் இன்று (அக்.23) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, நடிகர் ராம்கி உள்ளிட்டோர் படத்தின் உருவாக்கம் குறித்து பேசினர்.
தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“லக்கி பாஸ்கர் திரைப்படம் இந்திய குடும்பங்களின் கதையாகவே உருவாகி உள்ளது. பாஸ்கர் என்கிற கதாபாத்திரத்தை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். இந்தாண்டில் எனது உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டது. அதனால், தெலுங்கு மற்றும் மலையாளத்தின் டப்பிங் முடித்துவிட்டேன். தமிழ் டிரைலரில் நான் டப்பிங் பேசவில்லை. ஆனால், திரைப்படத்தில் என் குரல்தான் இருக்கும்.” என்றார்.
மேலும், "மங்காத்தா படத்தை நினைவுப்படுத்தும் விதமாக டிரைலரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் ஆண் ரசிகர்களைப் பெறுவதற்காக அஜித்தைப் பின்தொடர்ந்து வருகிறீர்களா?" என துல்கர் சல்மானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பதிலளித்த துல்கர் சல்மான், “நான் நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன். எதுவும் திட்டமிட்டு செய்ய முடியாது. அஜித்குமார் மாதிரி யாரும் வரமுடியாது. என்னாலும் முடியாது. அவர் அப்படியே இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.