“நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும்” - கே.டி.ராமராவ்!
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்திற்கு தெலங்கானாவின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிஆர்எஸ் எனும் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவரும், தெலங்கான தகவல் தொழில்நுட்ப துறை முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
“தொகுதி மறுவரையறை தொடர்பான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன். அவருக்கு இந்த விஷயத்தில் வலுவாக ஆதரவளிக்கிறேன். தேசத்திற்கு மிகத் தேவையான குடும்பக் கட்டுப்பாட்டை முறையாக அமல்படுத்தியதற்காக தென் மாநிலங்களை மத்திய அரசு தண்டிக்க கூடாது.
தென் மாநிலங்களின் முயற்சியை கருத்தில் கொள்ளாமல், நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வது ஜனநாயகத்திற்கோ, கூட்டாட்சிக்கோ பொருந்தாதது. மறுவரையறை நிர்ணயத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக இருந்தால், தேசத்திற்கான நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் மறுவரையறையை மேற்கொள்ள நான் முன்மொழிகிறேன்.
நாட்டின் வளர்ச்சியில் தெலங்கானா மற்றும் தென் மாநிலங்களின் பங்களிப்பை
யாரும் புறக்கணிக்க முடியாது. உதாரணமாக, தெலங்கானா நாட்டின் மக்கள்தொகையில் 2.8% மட்டுமே உள்ளது. ஆனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2% க்கும் அதிகமாக பங்களிக்கிறது.
ஜெய் தெலுங்கானா! ஜெய் ஹிந்த்”, என பதிவிட்டுள்ளார்.