"விராட் கோலியின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது"- முன்னாள் கிரிக்கெட் வீரர் குண்டப்பா விஸ்வநாத்
விராட் கோலியின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது என நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
டெண்டுல்கரின் முன்னிலையில் அவரது சாதனையை முறியடித்தார் விராட் கோலி. நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்பு வரை ஒருநாள் போட்டிகளில் சச்சின் அடித்த 49 சதங்களே தனிநபர் ஒருவரின் அதிகபட்ச சதங்களாக இருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 50- வது சதத்தை விளாசி அசத்தினார் விராட் கோலி, இதன் மூலம் சச்சினின் சாதனையையும் முறியடித்தார்.
இந்த நிலையில்,”விராட் கோலியின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது என நம்புகின்றேன்” என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் குண்டப்ப விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், சச்சினின் சதங்கள் சாதனையை ஒருவரால் நெருங்க முடியும் என்றால் அது விராட் கோலியால் மட்டுமே முடியும் என சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தேன். அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கவில்லை. அவரது சதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவர் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கும் விதம் சிறப்பாக உள்ளது.
அவரது சிறப்பான ஆட்டத்தினால் அவரால் தொடர்ச்சியாக அரை சதங்களைக் கடந்து ரன்கள் குவிக்க முடிகிறது. சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். மற்ற வீரர்களால் விராட் கோலியின் இந்த சாதனையை நெருங்க முடியாது என நான் நம்புகிறேன்.
ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா 30 -க்கும் அதிகமான சதங்கள் அடித்துள்ள போதிலும், விராட் கோலியின் சாதனையை நெருங்க அவருக்கு மேலும் பல சதங்கள் தேவைப்படுகின்றன. ரோஹித் சர்மாவைத் தவிர விராட் கோலியின் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள மற்ற வீரர்களை என்னால் சுட்டிக்காட்ட முடியாது என்றார்.