“எனது 800 #TestWickets சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது... காரணம் இதுதான்” - மனம் திறந்த முத்தையா முரளிதரன்!
தனது சாதனையை முறியடிப்பது என்பது தற்போதைய கிரிக்கெட்டில் சாதாரண விஷயம் அல்ல என்றும், அதற்கான காரணம் குறித்தும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார்.
டி20 போட்டிகளால் சமீப காலமாகவே டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதனால் பெரும்பாலான வீரர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து 35 வயதுகுள்ளேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான், வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கவலை தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்த ஆஃப்-ஸ்பின்னரான இவர், தனது சாதனையை எந்த பந்து வீச்சாளராலும் விரைவில் முறியடிக்க முடியாது என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது;
“டெஸ்ட் கிரிக்கெட்டை பற்றி நான் கவலைப்படுகிறேன். இப்போதெல்லாம் ஒவ்வொரு நாடும் 6 – 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றன. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஆஷஸ் தொடரில் விளையாடலாம். பல நாடுகளில் ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பதே இல்லை. இங்கே குறைவான டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெறுகிறது. எனவே 800 விக்கெட் சாதனையை ஒருவர் உடைப்பது மிகவும் கடினம்.
ஏனெனில் தற்போது கிரிக்கெட் என்பது ஷார்ட் ஃபார்மை நோக்கி நகர்ந்துள்ளது. எங்கள் காலத்தில் நாங்கள் 20 வருடங்கள் விளையாடினோம். ஆனால் இப்போதுள்ள வீரர்களின் விளையாட்டு காலம் என்பது குறைந்துள்ளது. தொடர்ந்து யாரும் விளையாடுவதில்லை என்பது பிரச்னையாகும். அனைத்து வீரர்களிடமும் திறமை இருந்தாலும் அவர்களால் அனுபவத்தை பெற முடியுமா? அதிக தொடர்கள் நடைபெறும் இந்த காலத்தில் அது கடினம்” என்று கூறினார்.