அதானி குழும வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு தேவையில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில், விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதானி குழுமத்திற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குச் சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு பங்குகள் விலையை உயர்த்தியதாக குற்றம் சாட்டியது. இந்த ஆய்வறிக்கை வெளியானதன் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
இதனையடுத்து ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் விஷால் திவாரி, எம்.எல்.சர்மா, காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் மற்றும் அனாமிகா ஜெய்ஸ்வால் ஆகியோர் தனித்தனியே 4 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், செபி அமைப்பின் விதிமுறைகள் குறித்தும், பங்குச்சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இந்த குழு தனது ஆய்வறிக்கையை கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் இன்று இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
- ஒரு குறிப்பிட்ட அளவே செபியின் அதிகார வரம்புக்குள் உச்சநீதிமன்றம் தலையிட முடியும்.
- குறிப்பாக அடிப்படை உரிமை என்பது மீறப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே இந்த நீதிமன்றம் ஆராய முடியும்.
- முறைகேடு விவகாரம் தொடர்பாக செபியின் விசாரணை 3 மாதத்தில் முடிக்கப்பட வேண்டும்.
- இந்த வழக்கை வேறு எந்த விசாரணை அமைப்புக்கும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
- மேலும் சம்பந்தம் இல்லாத 3-வது நபரின்(நிறுவனத்தின்) ஒரு அறிக்கையை ஆதாரமாக எடுத்துகொள்ள முடியாது.
- வழக்கு விசாரணையை செபி வசம் இருந்து சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
- ஹிண்டன்பர்க் அல்லது வேறு எந்த அமைப்பின் அறிக்கையும் ஒரு தனி ஆய்வுக்கு உத்தரவிடுவதற்கான அடிப்படையாக இருக்க முடியாது.
- செபியின் அதிகார வரம்புக்குள் தலையிட வேண்டாம் என்ற வாதத்தை ஏற்கிறோம்.
- பங்குச்சந்தை தொடர்பாக செபியின் தற்போதைய கட்டுப்பாட்டு விதிமுறைகள் எந்த வகையிலும் குறைபாட்டோடோ அல்லது சட்டவிரோதமானதாகவோ இல்லை.
- செய்தி நிறுவனங்களில் புலனாய்வு அறிக்கைகள் ஒரு தகவலாகவே (input) பார்க்க முடியுமே தவிர, அதனை முழு ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.
- FPI மற்றும் LODR ஒழுங்குமுறைகள் மீதான திருத்தங்களைத் திரும்பப்பெற செபிக்கு உத்தரவிட சரியான காரணங்கள் எதுவும் எழவில்லை.”
இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.