“பிஎப் முன்பணம் இனி இல்லை..” - அறிவிப்பு வெளியிட்ட இபிஎப்ஓ!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே முன்பணம் பெற முடியும் என்றும், கொரோனா காலத்தை ஒட்டி பயனாளிகளுக்கு வழங்கி வந்த முன்பணம் பெறும் வசதி இனி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப்ஓ 6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வரும் இபிஎப்ஓ, சமீபத்தில் பயனர்கள் முன்பணம் பெறுவதற்கான விதிமுறைகளை எளிதாக்கியது.
அதன்படி, கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுவது போன்ற கோரிக்கைகளுக்கு முன்பணம் பெற ஆட்டோ - மோட் செட்டில்மென்ட் எனப்படும் தானியங்கி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி விண்ணப்பித்த மூன்றே நாட்களில் பணம் கைக்கும் கிடைக்கும் என்று பிஎப் நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் தான் புதிய அறிவிப்பு ஒன்றை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகம் வெளியிட்டுள்ளது.
அதாவது, கொரோனா காலத்தை ஒட்டி பயனாளிகளுக்கு வழங்கி வந்த முன்பணம் பெறும் வசதி இனி கிடையாது என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இபிஎப்ஓ சார்பில், “கொரோனா இனி பெருந்தொற்றாக இல்லை என்பதால் பிஎப் பணத்தில் இருந்து முன்பணமாக எடுக்கும் வசதி உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது” என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.