இனி ஆபாச மெசேஜ் வராது - இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்!
இன்ஸ்டாகிராம் செயலியில் ஆபாசமான புகைப்படத்தை அனுப்பினால், அது பயனருக்கு சென்றடையும்போது ப்ளர் செய்யப்பட்டவாறு அனுப்பி வைக்கப்படும் நடைமுறையை அறிமுகப்படுத்தவுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டில் துவக்கப்பட்ட இன்ஸ்டா தற்போது உலகின் மிக பிரபலமான சோஷியல் மீடியா ஆப் ஆக இருந்து வருகிறது. சோஷியல் மீடியாக்களின் உலகத்தில் ஃபோட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை ஷேர் செய்யும் விதமாக இன்ஸ்டா ஒரு தவிர்க்க முடியாத பிளாட்ஃபார்மாக இருந்து வருகிறது. பயனர்கள் தங்களின் கலைப் படைப்புகளை காண்பிப்பது முதல் நடனம் மற்றும் பாடும் திறன்கள் வரை பல திறமைகளை வெளிப்படுத்த இன்ஸ்டா உதவுகிறது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல சோஷியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் அதன் யூஸர்களுக்காக தொடர்ந்து பல புதிய அம்சங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் செயலியின் நேரடி குறுஞ்செய்திகள் வாயிலாக ஆபாசமான புகைப்படத்தை அனுப்பினால், அது பயனருக்கு சென்றடையும்போது ப்ளர் செய்யப்பட்டவாறு அனுப்பி வைக்கப்படும்.
இதன் வாயிலாக பயனர் தனக்கு அனுப்பப்பட்டுள்ள உள்ளடக்கம் ஆபாசமானது என்பதை உறுதி செய்து, பின் செய்தி அனுப்பியவர் குறித்து புகார் அளிக்கலாம் அல்லது பிளாக் செய்யலாம். இந்த புதிய வசதியை சோதித்து பார்த்து வருவதாக இன்ஸ்டாகிராமின் இணையத்தள பதிவு தெரிவிக்கிறது. இந்த வசதி 18 வயதுக்கு குறைவான இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் 18 வயது நிரம்பியவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியுடன் படங்கள் பார்ப்பதற்கான வசதி அளிக்கப்படும் எனவும் இன்ஸ்டாகிராம் தெரிவித்தது.