இனி #OTP பெற தாமதாகும்... ஏன் தெரியுமா? #TRAI அதிரடி!
குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புது விதிமுறைகளை செப்.1 முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது.
நவீன டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகைகளில் மோசடி நடந்து வருகிறது. அதாவது, பொதுமக்களின் செல்போனுக்கு வரும் ஓடிபி-ஐ பெற்று, அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது, லிங்கை அனுப்பி அதன் மூலம் தகவல்களை திருடி பணத்தை எடுப்பது போன்ற மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளன. இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இந்த வகையான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது.
இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புது விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அதன்படி, எந்தவொரு நிறுவனம் மற்றும் அமைப்புகள் ஓடிபி அல்லது அங்கீகாரமான குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு முன்னர் அதன் தலைப்பு மற்றும் தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பதிவு செய்ய வேண்டும்.
இத்தகைய குறுஞ்செய்திகளை ‛ஸ்கேன்' செய்யவும், அதனை அணுகவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் உண்டு. இந்த புதிய விதிமுறைகளுக்கு உட்படாத தகவல்கள் தடை செய்யப்படும். வங்கிகள் அனுப்பும் ஓடிபி -ஆக இருந்தாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆக வேண்டும். இதனால், பயனர்களுக்கு ஓடிபி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வங்கிகள் இந்த விதிமுறைகளுக்கு உடன்படவில்லை என்றால், பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை பெறுவதில் பயனர்களுக்கு தாமதம் ஏற்படும்.
வங்கிகள் மற்றும் செயலி அடிப்படையில் சேவை வழங்குபவர்கள் எந்த எண்ணில் இருந்து ஓடிபி அனுப்பப்படும் என்பதை நாளை மறுநாளுக்குள் (ஆக.31) பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மோசடி நடவடிக்கைகளை குறைப்பதில் பெரும் பங்காற்றும் என டிராய் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை செப்.1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு டிராய் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் தகவல் வெளியாளியுள்ளது.
மேலும், செல்போன் மூலம் அழைப்பவரின் பெயரை, கேஒய்சி அடிப்படையில் மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து டிராய் செயல்பட்டு வருகிறது. இது அழைப்பவரின் உண்மையான விவரங்களை தெரிந்து கொள்ள உதவுவதுடன், ட்ரூகாலர் செயலி போன்றவற்றை மக்கள் சார்ந்து இருப்பதை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. அரசு அளித்த ஆவணங்களில் உள்ள பெயரை, மற்றவர்கள் தெரிந்து கொள்ள முடிவதால், மோசடிகளை தடுக்க முடியும் என டிராய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.