"இந்தியாவில் #Monkeypox பாதிப்பு இதுவரை இல்லை" - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!
இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு இதுவரைக்கும் எதுவும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் குரங்கம்மை நோய்காக சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள 10 படுக்கைகள் கொண்ட தனி சிறப்பு வார்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசி அவர் தெரிவித்ததாவது :
"உலக சுகாதார நிறுவனம் குரங்கம்மை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தெரிவித்திருந்தனர். திருச்சி, கோவை, மதுரை,சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குரங்கம்மை குறித்து பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்.
பன்னாட்டு விமான பயணிகள், தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகத்திற்கு வரும் பயணிகளிடையே குரங்கம்மை குறித்து சோதனை மேற்கொண்டு வருகிறோம். உலகில் குரங்கம்மையினால் 223 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு இதுவரைக்கும் எதுவும் இல்லை.
கோவை அரசு மருத்துவக் கல்லூரியில், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குரங்கம்மை நோய்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட குரங்கம்மை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
நெகட்டிவ் பிரஷர் வார்டு என்ற குரங்கம்மைக்காக தொடங்கியுள்ளோம். குரங்கம்மை கண்டறிய சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவமனை மட்டுமல்லாமல் விமான நிலையங்களில் கூட சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஏதேனும் குரங்கம்மையால் பாதிப்பு ஏற்பட்டால் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
இதையும் படியுங்கள் : 3 ஆண்டுகளில் முதலமைச்சர் #MKStalin-னின் வெளிநாட்டுப் பயணங்களும்…கையெழுத்தான ஒப்பந்தங்களும்…
குரங்கம்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 200 பேர் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் தொடங்கப்பட உள்ளது. இந்த குரங்கம்மை எப்படி பரவுகிறது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இந்த குரங்கம்மையினால் பாதிக்கப்பட்டால் எப்படி பாதிப்புக்குள்ளார்கள் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
டெங்கு பாதிப்பு என்பது தற்போது வரை கட்டுக்குள் தான் உள்ளது..கடந்த நான்கு ஆண்டுகளாக டெங்கு உயிரிழப்பு 5, 6 என்ற எண்ணிக்கையில் வருகிறது. வடகிழக்கு பருவமழை எதிரொலியாக இந்த டெங்கு பாதிப்பு அதிகரிக்கப்படும். எனவே, டெங்கு பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்"