For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஆளுநர் யாராக இருந்தாலும், தமிழக சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்” - தவெக தலைவர் விஜய்!

03:19 PM Jan 06, 2025 IST | Web Editor
“ஆளுநர் யாராக இருந்தாலும்  தமிழக சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்”   தவெக தலைவர் விஜய்
Advertisement

“மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும், தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 

Advertisement

நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் உரையை வாசிக்காமல் எழுந்து சென்றார். ஆளுநரின் இந்த செயலுக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தவெக தலைவர் விஜய் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;

“தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும், தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும். ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement