“மீண்டும் மாநில அந்தஸ்து கோருவது தான் காஷ்மீர் சட்டப் பேரவையில் முதல் தீர்மானம் " - உமர் அப்துல்லா!
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக யார் பதவியேற்றாலும், சட்டமன்றத்தில் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க கோரி, தீர்மானம் நிறைவேற்ற பட வேண்டும் என உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி வென்றுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவியேற்பார் என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா நேற்று தெரிவித்தார். இந்நிலையில் இன்று உமர் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது:
தன்னை முதலமைச்சராக அறிவித்த தனது தந்தை ஃபருக் அப்துல்லாவிற்கு நன்றி. இருப்பினும் உரிய நடைமுறைப்படி தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களால், முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்.
மேலும் ஜம்மு காஷ்மீரில் முதலமைச்சராக யார் பதவியேற்றாலும், முதலில் சட்டமன்றத்தை கூட்டி மாநில அந்தஸ்து வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்ற பட வேண்டும்.
அதே நேரத்தில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு வாக்குறுதியளித்து உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, புதிய முதலமைச்சர் தலைநகர் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.