எங்க இருந்தாலும் மனசுக்கு பிடிச்சத செய்யனும்.. கனவு வேலைக்காக ரூ.83 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய அமெரிக்க பெண்!
பிடித்த வேலைக்காக ரூ.83 லட்சம் சம்பளம் தரும் வேலையை உதறி தள்ளி விட்டு பேக்கரி சமையல்காரராக பணியாற்றி வருகிறார் அமெரிக்காவை சேர்ந்த வலேரி வால்கோர்ட்.
கைநிறைய சம்பளம் வாங்கினாலும் மனதுக்கு பிடித்த வேலையை செய்ய வேண்டும். ஏனெனில் அப்பொழுது தான் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். ஆனால் எல்லோராலும் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்ய இயலாது. காரணம் சூழ்நிலை. எவ்வளவு குறைவான சம்பளம் கொடுத்தாலும் பிடித்த வேலையை தவிர வேறு எதையும் செய்யமாட்டேன் என சொந்த ஊரிலேயே சிலர் இருப்பர். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், மனதுக்கு பிடிக்காத வேலையை சிலர் செய்துகொண்டிருப்பர்.
இவ்வாறு பலர் பல வாழ்க்கை சூழலில் வாழ்ந்து வரும் நிலையில், அமெரிக்காவை சேர்ந்த வலேரி வால்கோர்ட் என்ற பெண் தனது 83 லட்சம் ரூபாய் சம்பளத்தை விட்டு விட்டு, தனக்கு பிடித்த வேலையான பேஸ்ட்ரி செஃப் ஆக பணியாற்றி வருகிறார். கூகுள், அமேசான் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியவர் வலேரி. முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தனது வேலையை விட்டுவிட்டு பேஸ்ட்ரி செஃப் பயிற்சிக்காக பிரான்சுக்கு சென்றுள்ளார்.
தற்போது 34 வயதாகும் வலேரி பிரான்ஸின் Tournon-sur-Rhone என்ற கிராமத்தில் உள்ள Maison Chabran என்ற உணவகத்தில் பேஸ்ட்ரி உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இங்கு தோராயமாக ரூ.25 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார். மேலும் வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய 5 வார விடுமுறையும் வழங்கப்படுகிறது. இ துகுறித்து இவரிடம் கேட்டபோது, முன்பைவிட தற்போது குறைவான சம்பளம் என்பது எப்போதும் எனக்கு வருத்தத்தை தந்ததில்லை. அமெரிக்காவில் இருந்ததை விட நான் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்நாட்டின் கலாச்சாரம், எனது ஓய்வு நேரம் என நான் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என தெரிவித்தார்.