“எந்த இடர் வந்தாலும் கல்வியை மட்டும் விட்டுவிடக் கூடாது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவச்சந்திரன் என்பவர் தமிழ்நாடில் முதலிடமும், இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு சார்பில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,
“யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப் பெற்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் வளர்ச்சிக்காகவே நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனுடைய முழுபலனை தற்போது பார்க்கிறோம். கல்விதான் நமக்கு ஆயுதம். எந்த இடர் வந்தாலும் கல்வியை விட்டுவிடக்கூடாது.
கடந்த சில ஆண்டுகளாக யுபிஎஸ்சி தேர்வில் நமது மாணவர்களின் தேர்ச்சி குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதனை மாற்றி உள்ளீர்கள். தமிழகத்திற்கென அறிவு முகம் இருக்கிறது. தமிழக அதிகாரிகளுக்கு தனி மதிப்பு உள்ளது.
முதலில் மக்களுடைய மனதில் இடம்பெற வேண்டும். சமூகநீதி, நேர்மை, துணிவு ஆகியவற்றை மனதில் வைத்து ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காக பாடுபடுங்கள். இந்த மூன்றையும் மனதில் வைத்து பணியாற்றினால் மக்கள் நம்மை மறக்க மாட்டார்கள். கடமையை நிறைவேற்றி ஒரு தந்தைக்கு கொடுக்கும் மகிழ்ச்சியை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு ரோல் மாடலாக பலர் இருக்கலாம். இனிமேல் நீங்கள் பலருக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம்.
அதிகாரம் என்பது சமூகத்திற்கும், சக மனிதருக்கும், எளியவர்க்கும் உதவுவதாக, அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதாக அமைய வேண்டும். அதிகாரம் உங்கள் கைகளை நோக்கி வர இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்துங்கள்” என அனைவருக்கும் அறிவுரை வழங்கினார்.