"எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அச்சப்பட மாட்டோம்" - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அச்சப்பட மாட்டோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி, நேற்றுடன் நிடைவடைந்தது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
"எவ்வளவு நெருக்கடிகள், அழுத்தங்கள் கொடுத்தாலும் அவர்கள் கொடுக்கும் அழுத்தங்கள் எங்களை ஆவேசப்படுத்தும், அரசியல் படுத்துமே தவிர அச்சப்படுத்தாது. சிதைந்து கொண்டிருக்கும் தமிழ் மொழியை நீட்சித்து எடுக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். நம் கடைகளின் விளம்பர பலகைகளில் கூட தமிழ் இல்லை. தமிழ் எழுத்து இருக்கும் ஆனால் ஆங்கில உச்சரிப்பு இருக்கும். பல ஆண்டு காலமாக நம் தாய்மொழி சிதைந்து, அழிந்து கொண்டிருப்பதை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.
90 விழுக்காட்டிற்கு மேலாக நாம் ஆங்கிலம் கலந்து பேசிக்கொண்டிருக்கிறோம். எங்கள் சின்னத்தை கூட ஒலிவாங்கி என்று கூறினால் மக்களுக்கு புரியாத ஒரு நிலைமை, மைக் என்று சொல்ல வேண்டி உள்ளது. இமயம் வரை பரவி இருந்த ஒரு இனம் தற்போது அதிகாரமின்றி, அடிமையாக வாழ வேண்டிய காரணம் என்ன? நாம் அடிமைகள் என்பதை ஏற்க மறுக்குறீர்கள். தாய்மொழியில் படித்தால், பேசினால் வேலை கிடைக்காது என்றால் அது அடிமை இனம்.
காங்கிரஸ், பாஜக நம் மொழிக்காக, உரிமைக்காக நின்றுள்ளார்களா? தாய் மொழியில் வழக்காடும் உரிமை கூட நம் இனத்திற்கு கிடையாது. எங்கள் வளம் எங்களுக்கே என்பதை கூறி எங்களிடம் இருந்து எடுக்கும் மின்சாரத்தை எங்களுக்கே தர வேண்டியத்தில்லையா?இலங்கை கடற்படையினர் எத்தனை படகுகளையும், மீனவர்களையும் கைது செய்தார்கள்? அதற்கு ஒரு தீர்வு கொண்டு வந்தது உண்டா?"
இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.