For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஒரு குழந்தை கூட பசியோடு பள்ளிக்கு வந்து தவிக்கக் கூடாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

10:20 AM Jul 15, 2024 IST | Web Editor
 ஒரு குழந்தை கூட பசியோடு பள்ளிக்கு வந்து தவிக்கக் கூடாது    முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தை கூட பசியோடு பள்ளிக்கு வந்து தவிக்கக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement

பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர் தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர், மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜர் பிறந்தநாளான இன்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தினார். முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி மேடையில் பேசினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து மிக மிக மகிழ்ச்சியோடு உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று கேட்டால் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், தமிழ்நாட்டில் இருக்கிற பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோரின் முன்னேற்றத்திற்கும், எதிர்காலத்திற்கும், முதலமைச்சராக இருந்து பணியாற்றும் வாய்ப்பு, பாடுபடும் எண்ணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பசி போக்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் காலை உணவு திட்டம். பெற்றோருக்கே உரிய பாச உணர்வோடு நான் தொடங்கிய திட்டம் தான் காலை உணவு திட்டம். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை, ஒரு குழந்தை கூட பசியோடு பள்ளிக்கு வர கூடாது என்பதற்காக தான் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா பிறந்த நாள் அன்று காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன். இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை அன்று விரிவுபடுத்தி உள்ளேன். இந்த திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 20 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்  : கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்!

திமுக அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் பாராட்டுகின்றனர். காலை உணவு திட்டத்தில் எந்த இடத்திலும் உணவின் தரம் குறைய கூடாது. ஏழை, எளிய மாணவர்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் நலமான, வளமான, அறிவுமிக்க சமூகமாக வளர்த்தெடுக்கிறோம்.காலை உணவு திட்டம் பற்றி அதிகாரிகள் என்னுடன் விவாதித்த போது, அதை நிதி ஒதுக்கீடு என்று சொல்லாதீர்கள், வருங்கால தலைமுறையை உருவாக்குவதற்கான முதலீடு என்று சொல்லுங்கள் என்று ஆணித்தரமாக சொன்னேன். காலை உணவு திட்டம் பெற்றோருக்கான சுமையை குறைத்து பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. நாம் தொடங்கிய காலை உணவு திட்டம் கனடா போன்ற நாடுகளில் தொடங்கப்பட்டு உள்ளது.

திமுக அரசையும் என்னையும் பொறுத்தவரை தமிழ்நாடு மாணவர்கள் படிப்பதற்கு எதுவாகும் தடையாக இருக்க வேண்டாம். அது பசிவாக இருந்தாலும் சரி, அது நீட் தேர்வாக இருந்தாலும் சரி, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, எந்த தடையை இருந்தாலும் அந்த தடையை உடைப்பதே திமுகவின் பணி. பொய் செய்திகள் மூலம் ஒருசில கருத்துருவாக்கங்கள் உருவாக்கி அதில் குளிர்காயலாம் என்று நினைக்கும் மக்கள் விரோத சக்திகளின் அஜெண்டா எந்த காலத்திலும் நடக்காது.

நீட் தேர்வை நான் எதிர்த்த போது, சிலர் ஏன், எதற்கு என கேள்வி கேட்டார்கள். ஆனால் இன்று நீட் தேர்வு முறைகேடுகளை பார்த்து உச்சநீதிமன்றமே கேள்வி கேட்டுள்ளது. நீட் தேர்வை பல தலைவர்கள், மாணவர் அமைப்புகள் தற்போது எதிர்த்து வருகின்றன. தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்தபோது முதலில் கேள்வி எழுப்பியர்கள் கூட தற்போது ஆதரிக்கின்றனர். மத்திய  அரசு அரசியலுக்காக இப்போ நெருக்கடி நிலைகாலத்தை பற்றி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசி வருகிறது. ஆனால், நெருக்கடி நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை, மத்திய அரசு தற்போது மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தயாராக இருக்கிறதா?. இந்த ஆக்கப்பூர்வமான செயலை அவர்கள் செய்வார்களா?. மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். கல்விதான் யாரும் திருட முடியாத சொத்து"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
Advertisement