"எத்தனை அணி அமைத்தாலும் இரு அணிகள் தான் களத்தில் நிற்கும்" - திருமாவளவன் பேட்டி!
நாகர்கோவிலில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயலாற்ற வேண்டும். உலக அமைதியை சீர்குலைக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளை அழிக்க அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளும் முழுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நாடு நெருக்கடியான சூழலில் உள்ளது. அரசியல் தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட அனைத்து கட்சி தலைவர்களின் கருத்தை அறிய வேண்டியது நாட்டின் தலைமைக்கான பொறுப்பு.
எனவே சிறப்பு அமர்வு அல்லது நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஏற்பாடு செய்ய வேண்டும். எதிர்கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டு அறிய வேண்டும். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன். சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. 2026 தேர்தலில் 3-வது அணி மட்டும் அல்ல எத்தனை அணி அமைத்தாலும் தேர்தலில் இரு துருவ அணிகள் தான் களத்தில் நேருக்கு நேர் மோதும் சூழல் உள்ளது என தெரிவித்துள்ளார்.