"ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை" - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
நாடாளுமன்றத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நாடாளுமன்றத்தில், மத்திய பட்ஜெட் 2025-ஐ தாக்கல் செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி, பொதுமக்களை மனதில் கொண்டு பட்ஜெட் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டானது ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கம் கொண்டது என்றார்.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அப்போது வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்துவதாக தெரிவித்தார். இதன்படி மாத சம்பளம் ஒரு லட்ச ரூபாய் பெறுபவர்கள் இனி வருமான வரி கட்ட தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.