“மத்திய அமைச்சராக தொடர்வதில் விருப்பம் இல்லை!” - சுரேஷ் கோபியின் பேட்டியால் பரபரப்பு!
மத்திய இணையமைச்சராக நேற்று இரவு (09.06.2024) பதவியேற்ற நடிகர் சுரேஷ் கோபி, அமைச்சராக தொடர்வதில் விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி, 4.12 லட்சம் வாக்குகள் பெற்று, 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கேரளாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு பாஜக எம்பி சுரேஷ் கோபி என்பதால், அவருக்கு அமைச்சர் பதவியை பாஜக தலைமை கொடுத்தது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று இரவு (09.06.2024) பதவியேற்ற பிறகு மலையாள ஊடக ஒன்றிற்கு பேட்டி அளித்த சுரேஷ் கோபி, படங்களில் நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருப்பதால், தற்போது அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லை என்று கட்சித் தலைமையிடம் கூறியிருந்தேன். ஆனால், கட்சித் தலைமை கூறியதால் பதவியேற்றுக் கொண்டேன் என்று தெரிவித்தார். மேலும், கோரிக்கையை ஏற்று அமைச்சர் பதவியில் இருந்து கட்சித் தலைமை விரைவில் தன்னை விடுவிக்கும் என்று நம்புவதாகவும், எம்.பி.யாக திருச்சூர் மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சுரேஷ் கோபியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.