"தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை 3 ஆக பிரிப்பதற்கான முடிவு இல்லை" - மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்றாக பிரிப்பதற்கான எந்த முடிவும் மாநில அரசால் இதுவரை எடுக்கப்படவில்லை என்று மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்பதை அரசு அறிந்திருக்கிறதா? இந்த நிறுவனம் பொதுமக்களுக்கு 'குறைக்கப்பட்ட இழப்புகளைக் காட்டுவதற்காக மூன்றாகப் பிரிக்கப்படப் உள்ளது உண்மையா?, நெருக்கடியை சமாளிக்க பல்வேறு முகமைகள் மூலம் TANGEDCO-விற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் விவரங்கள்மற்றும் இது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விகளுக்கு மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே சிங், எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
கடந்த 2019-20 நிதியாண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ரூ.11,965 கோடி இழப்பில் இயங்கியதாகவும், அதேபோல 2020-21 நிதியாண்டில் ரூ.13,047 கோடி இழப்பில் இயங்கியதாகவும் தெரிவித்தார். மேலும் 2021-22 நிதியாண்டில் ரூ.11,955 கோடி இழப்பில் இயங்கியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: கனமழையால் போக்குவரத்து தடை – அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு!
மேலும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் ரூ.1,25,828.99 கோடி கடன் ஒப்பந்தம் போடப்பட்டு அதில் ரூ.95,725.19 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விடுவிக்க வேண்டிய கடன் நிலுவை தொகை நிகழாண்டு நவம்பர் மாதம் வரையில் 81,385 கோடியாக உள்ளது.
அதே போல மத்திய அரசின் முந்தைய திட்டங்களின்கீழ் நேரடி ஒதுக்கீடாக ரூ.2,758 கோடியில் ரூ.2,713 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போதைய மின் சீரமைப்பு திட்டங்களின் கீழ் மொத்தம் 8,838 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் Loss reduction பணிக்காக 267.97 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், Smart மீட்டரிங் பணிக்காக ரூ.3,398 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிறுவனத்தை மறுசீமைப்பது அதாவது மூன்றாக பிரிப்பது குறித்தான எந்த முடிவும் மாநில அரசால் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.