நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி… #France அரசு கவிழ்ந்தது!
பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால் அரசு கவிழ்ந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் மேக்ரோனின் மையவாத கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி, அதிதீவிர வலதுசாரிகள் கூட்டணி ஆகியவை போட்டியிட்டன. இதில் அதிதீவிர வலதுசாரிகளின் தேசிய பேரணி கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து பிரான்ஸின் புதிய பிரதமராக மிஷேல் பார்னியேர் தேர்வு செய்யப்பட்டார்.
மிஷேர் பார்னியேர் பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த சூழலில், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மிஷேல் பார்னியேர் 2025-ம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதிபர் மேக்ரோனின் அனுமதியுடன் பட்ஜெட்டை எப்படியும் நிறைவேற்றுவேன் என மிஷேல் பார்னியேர் தெரிவித்தார்.
இதற்கிடையே, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் பார்னியர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தில் மொத்தமுள்ள 577 உறுப்பினர்களில் 331 பேர் பிரதமர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரான்ஸ் அரசு கவிந்தது.
இதனையடுத்து, 3 மாதங்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்ற பார்னியேர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பிரான்ஸ் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.