பெண்கள் பாதுகாப்பிலும் சட்டப் பிரச்னைகளிலும் No Compromise - தவெக தலைவர் விஜய் பேச்சு!
தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகினார். அதன்படி, திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
அவர் பேசியது, ”போருக்கு சொல்வதற்கு முன் குலதெய்வ கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவர் அதுபோல தேர்தலுக்கு போவதற்கு முன் மக்களை பார்த்துட்டு போகலாம் என்று வந்துள்ளேன்.
ஒரு சில மண்ணை தொட்டால் ரொம்ப நல்லது. ஒரு சில நல்ல காரியங்களை இந்த இடத்துல இருந்து தொடங்கினால் நல்லது என்று பெரியவர்கள் சொல்வார்கள் இல்லையா? அது மாதிரி திருச்சியில் தொடங்கினால் திருப்பு முனையாக அமையும். அதற்கு உதாரணமாக அண்ணா அவர்கள் 1956ல தேர்தல்ல நிற்க நினத்தது திருச்சியில்தான். எம்ஜிஆர் 1974ல முதல் மாநாடு நடத்தியது திருச்சியில்தான்.
அது மாதிரி திருச்சிக்கு நிறைய வரலாறு உண்டு. பெரியார் வாழ்ந்த இடம். மலைக்கோட்டை இருக்கும் இடம். மதசார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பெயர் போன இடம். கொள்கை உள்ள மண் இது. அது மட்டுமில்லாமல், உங்களை பார்க்கும்போது மனசுக்குள்ள ஒரு பரவசம், ஒரு எமோஷன்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் எத்தனை விஷயங்களை நிறைவேற்றியிருக்காங்க? டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணக்கீடு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு, பழைய ஓய்வூதிய திட்டம், 2 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்புவது. இவை எல்லாம் என்ன ஆனது?
நாம் கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடமிருந்து எந்தப் பதிலும் வரப்போவதில்லை. திருச்சி மக்களுடைய சத்தம் கேட்கிறதா முதல்வர் அவர்களே?
திமுகவைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ‘ஓசி ஓசி’ எனச் சொல்லிக்காட்டுகிறார்கள். அனைத்து மகளிருக்கும் ₹1,000 தருவதில்லை. ஆனால், கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.
ஆனால், கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை த.வெ.க செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பிலும் சட்டப் பிரச்னைகளிலும் No Compromise. நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம்”
என்று பேசிமுடித்தார்.