‘குழந்தை இல்லை’... மருத்துவரை கொடூர முறையில் கொலை செய்த மாமியார், மாமனார்... கொலைக்கு திட்டம் தீட்டிய கணவர் சிக்கியது எப்படி?
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் 30 வயது பெண் மருத்துவரை, அவரின் கணவரின் பேச்சை கேட்டு, மாமியார் மற்றும் மாமனார் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் மருத்துவருக்கு குழந்தை இல்லாததே கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலையை தொடர்ந்து பெண் மருத்துவரின் மாமியார் ஜெயஸ்ரீயும், மாமனார் கமன்னா ஹோனகண்டேவும் இதை ஒரு விபத்து போல சித்தரிக்க முயன்றுள்ளனர். பின்னர் விசாரணையில் இது கொலை என அம்பலப்படுத்தப்பட்டது.
மகாராஷ்டிராவின் சதாராவில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரியும் சந்தோஷ், 2020ஆம் ஆண்டு ரேணுகாவை மணந்தார். விஜயபுரா மாவட்டத்தில் உள்ள சடாச்சனைச் சேர்ந்த ரேணுகா, ஒரு மருத்துவராகப் பணியாற்றினார். இருவரும் படித்தவர்களாகவும், பண வசதி கொண்டவர்களாக இருந்தபோதிலும் தொடக்கத்திலிருந்தே இருவரிடையே பிரச்னைகள் இருந்து வந்துள்ளது.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். ரேணுகாவின் உடல்நிலை மற்றும் குழந்தை இல்லாதது காரணமாகவே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதற்கிடையே சந்தோஷ் வேறு திருமணம் செய்துள்ளார். அவரது இரண்டாவது மனைவி இப்போது கர்ப்பமாகவும் உள்ளார்.
இந்நிலையில் மே18 ஆம் தேதி ஜெயஸ்ரீ, ரேணுகாவை ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அன்று இரவு திரும்பி வரும்பொழுது காவல்துறைக்கு போன் செய்து, ரேணுகா விபத்தில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கிய போலீசார், ரேணுகாவை தவிர மற்ற யாருக்கும் விபத்தில் காயங்கள் இல்லாததை வைத்து சந்தேகமடைந்தனர்.
பின்னர் விசாரணையில்,“கோயிலுக்கு சென்ற ரேணுகாவை செல்லும் வழியில், இருசக்கர வாகனத்தில் இருந்து அவரது மாமியார் ஜெயஸ்ரீ தள்ளிவிட்டுள்ளார். கீழே விழுந்தவரை கல்லால் தாக்கி, கழுத்தை நெரித்து அவரது மாமனார் கமன்னா கொலை செய்துள்ளார். பின்னர் இருவரும் அவரது உடலை பைக்கில் கட்டி, 100 மீட்டருக்கு மேல் இழுத்துச் சென்று, அவரது சேலை பைக் சக்கரத்தில் சிக்கியதால் விபத்து ஏற்பட்டது என தெரிவித்துள்ளனர்” என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசாரின் தொடர் கிடுக்குப்பிடி விசாரணையில், ஜெயஸ்ரீ மற்றும் கமன்னா கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகவும், அவர்களின் மகன் சந்தோஷ் ஹோனகண்டேவே ரேணுகாவைக் கொல்லத் தூண்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.