"தமிழ்நாட்டில் Smart City Scheme-ல் புதிய நகரங்களுக்கு வாய்ப்பில்லை" - திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்!
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் புதிய நகரங்கள் இணைக்கப்பட வாய்ப்பில்லை என திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் டோகன் சாஹு பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு, "தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு அரசு நிதி வழங்கியுள்ளதா? அப்படியானால், அது தொடங்கப்பட்டதில் இருந்து இன்றுவரை ஒதுக்கப்பட்ட நிதியின் விவரங்கள் என்ன? தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? பல ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை நாட்டில் விரிவுபடுத்தவும் தொடங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் என்ன?" ஆகிய கேள்விகளை எழுப்பினார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் டோகன் சாஹு இதற்கு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,
"தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர் உள்ளிட்ட 11 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதற்காக ரூ.10,879 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், ரூ.10,490 கோடி விடுக்கப்பட்டது. இந்த நிதியில் 94 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் மார்ச் 2025 ல் முடிவடையும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் புதிய நகரங்கள் இணைக்கப்பட வாய்ப்பில்லை"
இவ்வாறு மத்திய அமைச்சர் டோகன் சாஹு தெரிவித்துள்ளார்.