“ஆதவ் அர்ஜுனா கருத்தில் உடன்பாடு இல்லை” -#VCK துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு!
ஆதவ் அர்ஜுனா கருத்தில் உடன்பாடு இல்லை என அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா. இவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் திமுக குறித்தும், அக் கட்சியுடனான கூட்டணி குறித்தும் பேசி இருந்தார். அப்போது அமைச்சர் உதயநிதி குறித்தும், திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், 'வி.சி.க கூட்டணி இல்லாமல் வடமாவட்டங்களில் தி.மு.க வெல்ல முடியாது, குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தமிழ்நாட்டில் கூட்டணி அமைய வேண்டும், அமைச்சரவையில் வி.சி.க, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கு இடம் அளிக்க வேண்டும்' எனப் பேசியிருந்தார். அவர் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் தி.மு.க-வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா கருத்தில் உடன்பாடு இல்லை என அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னி அரசு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ஆதாவ் அர்ஜுனாவின் கருத்திற்கு நாங்கள் உடன்படவில்லை.தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடித்திருக்கிறோம். எழுச்சித் தமிழர் தலைமையில் லட்சக்கணக்கான தொண்டர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தான் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற முடிந்தது. வேறு எந்த நிறுவனத்தாலும், எந்த தனிநபர் முயற்சியாலும் விசிக வெற்றி பெறவில்லை. ஒரு நிறுவனத்தின் முயற்சியால் விசிக வெற்றி பெற்று அங்கீகாரம் பெற்றதை போன்று போலியான தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார் ஆதவ் அர்ஜுன்” என வன்னி அரசு தெரிவித்தார்.