“சேரி குறித்து பேசியதிலிருந்து பின்வாங்க மாட்டேன்!” - தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு திட்டவட்டம்!!
சேரி குறித்து பேசியதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காத தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, த்ரிஷாவுக்காக குரல் கொடுப்பதாக கூறி, எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு நபர் விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த குஷ்பூ, தங்களைப்போல், சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று பதிவிட்டிருந்தார். அவரின் அந்தப் பதிவில், ‘சேரி மொழி’ என குறிப்பிடப்பட்டிருந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது குஷ்பு பேசியதாவது:
நான் ஊர்ல இல்லாத நேரத்தில் எனது வீட்டில் முற்றுகை செய்ய முயன்றுள்ளனர். அரசாங்க வார்த்தையில் சேரி என்கிற வார்த்தை வரும். வேளச்சேரி என்பதற்கு என்ன அர்த்தம். எனக்கு தமிழ் தெரியாது என்றே வைத்து கொள்ளலாம். சேரி என்பதற்கு அர்த்தம் என்ன. என்னைப் பொருத்தவரை அனைவரும் சமம் எல்லா இடங்களும் ஒரே இடம்தான். தகாத வார்த்தை நான் பயன்படுத்துவதில்லை. நான் யாரையும் தவறாக பேசுவதில்லை. ஒரு பெண்ணை பார்த்து கேள்வி கேட்கும் போது காங்கிரசுக்கு பதில் அளிக்க முடியவில்லை. திமுக பிரமுகர் என்னை சாடிய போதும் கேட்பதற்கு முடியாத காங்கிரஸ் என்னை கேள்வி கேட்பதற்கு மட்டும் முன் வருகிறது. மணிப்பூரில் அந்த சம்பவம் நடந்த பிறகு எனக்கு வீடியோ வந்து பார்த்தவுடன் நான் குரல் கொடுத்தேன்.
மே மாதம் அதற்கு நான் குரல் கொடுத்து அவர்களை தூக்கிலிட சொன்னது நான் தான்.
சேரி என்ற வார்த்தை மிகப்பெரிய அளவில் வலம் வருவதால் அதனை டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்க முடியுமா என்ற கேள்விக்கு. இதுவரையிலும் நான் எந்த ட்விட்டரையும் நீக்கியதில்லை. பயந்து பின் வாங்கக்கூடிய ஆள் குஷ்பு கிடையாது. சத்தியமாக என்னால் தவறான பாஷை பேச முடியாது. இத்தனை வருடம் சினிமாவில் நான் யாரையும் கெட்ட வார்த்தையில் திட்டியது கிடையாது அந்த பழக்கமும் இல்லை. தமிழ்நாடு காவல்துறைக்கு நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஊரில் இல்லாத நேரத்தில் காவல்துறை எனது குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருந்துள்ளது.
காங்கிரஸ்காரர்களை நான் மதிப்பதே இல்லை. அனிதா தற்கொலையின் போது குஷ்பூ ஏன் குரல் கொடுக்கவில்லை என காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 2017ல் நான் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன் அது கூட அவர்களுக்கு தெரியவில்லை.
தேசிய மகளிர் ஆணையம் பல ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால் குஷ்பூ உறுப்பினரான பிறகு தான் தமிழ்நாட்டில் பலர் கும்பகர்ணனை போல் எழுந்துள்ளார்கள். நான் பதவி ஏற்பதற்கு முன்பு தேசிய மகளிர் ஆணையத்தை பற்றி யாராவது பேசியுள்ளார்களா. இதே காங்கிரஸ்காரர்களும், திமுகவினரும் பேசவில்லை. குஷ்பூ-வை வைத்து பெயர் வாங்கலாம் என பலரும் நினைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிராக கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 450 வழக்குகள் உள்ளது. அதன் மீது திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் 450 வழக்குகள் ஒரு வருடத்தில் மட்டும் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது. அது குறித்து காங்கிரஸ்காரர்கள் யாரும் யார் வீட்டின் முன்பும் முற்றுகையிடவில்லை. இதே காங்கிரஸ்காரர்களும் ரஞ்சன் குமாரும் தூங்கிக் கொண்டிருந்தார்களா ? இதே விசிக, காங்கிரஸ் காரர்களை பார்த்து ராகுல் காந்தியை பார்த்தும் ஸ்டாலினை பார்த்தும் கை கொடுக்கிறார். தலித் ஒருவரின் பிணத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. வேங்கை வயலில் மலம் கலந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமா இல்லையா என்பதை எனது கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். கட்சித் தலைவர் நட்டா, அமித்ஷா, மோடி ஆகியோர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் சொல்வதற்கு கீழ் கட்டுப்படுவேன். கடந்த சட்டசபை தேர்தலில் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடுமாறு எனக்கு கட்சித் தலைமை கூறியதன் பேரில் போட்டியிட்டேன். வரும் தேர்தலிலும் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன் இல்லை என்றால் நாடு முழுவதும் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்.
நடிகை விசித்ரா புகார் இதுவரை தேசிய மகளிர் ஆணையத்திற்கு வரவில்லை. தேசிய மகளிர் ஆணையத்தை பொருத்தவரை ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாநிலங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா, ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு மட்டுமே நான் பொறுப்பு. நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்பதால் ஆணையத்தின் செயல்பாடுகளில் பாரபட்சம் பார்ப்பேன் எனும் அடிப்படையில் எனக்கு ஐந்து மாநிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு எனது பொறுப்பில் இல்லை.
இவ்வாறு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கூறியுள்ளார்.