"வீராணம் ஏரிக்கு மிகப்பெரிய ஆபத்தாக என்எல்சி உள்ளது" - அன்புமணி ராமதாஸ்!
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மக்கள் உரிமை மீட்பு பயணத்தின் ஒரு பகுதியாக இன்று அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வீராணம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார. அதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் அப்பகுதியில் கூடியிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கை குறித்து கேட்டு அறிந்தார். பின்னர் பேசிய அவர்,
”ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட
தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி. சோழர்களின்
காலத்திற்குப் பிறகு மக்களாட்சி வந்தும் இதுவரை தூர்வாரப்படவில்லை.
47 அடி ஆழம் கொண்ட வீராணம் ஏரி தற்போது 25 அடியில்தான் உள்ளது. இதனை
பயன்படுத்தி நேரடியாக 50,000 ஏக்கர் சாகுபடியும் இதற்கு பிறகு ஆன சிறு ஏரி
மற்றும் பாசனப்பகுதிகளின் வழியே 40 ஆயிரம் ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டு
வருகிறது. காவிரியில் இருந்து வரும் தண்ணீர் இப்பகுதி பாசனத்திற்கும் இங்கிருந்து சென்னை குடிநீர் தேவைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 1.5 டிஎம்சி தண்ணீர் தேக்கும் அளவிற்கு உள்ள வீராணம் ஏரியில் தற்போது போதிய தண்ணீர் தேக்க முடியாத சூழல் உள்ளது.
ஆனால் இதுவரை ஆண்ட கட்சிகள் எல்லாம் வீராணம் ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் கரையை பலப்படுத்துவதற்கு 100 கோடி தூர்வார பலகோடி என ஊழல் செய்து கொண்டு இருக்கிறார்கள். திமுக என்றாலே கொள்ளை அடிக்கும் கட்சி தான்.
வீராணம் ஏரிக்கு மிகப்பெரிய ஆபத்தாக என்எல்சி நெய்வேலி பழுப்பு நிலக்கரி
சுரங்கம் உள்ளது. என்எல்சி ஏற்கனவே இரண்டு சுரங்கங்கள் இயங்கி வருகிறது தற்போது மூன்றாவதாக ஒரு சுரங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக 12,000 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான கோப்புகள் முதல்வரின் மேஜையில் உள்ளது. இதுபோக இன்னும் மூன்று நிலக்கரி சுரங்கங்கள் நிலுவையில் உள்ளது வீராணம் நிலக்கரி சுரங்கம், பாளையங்கோட்டை நிலக்கரி சுரங்கம், சேத்தியாதோப்பு
நிலக்கரி சுரங்கம் ஆகியவை அனுமதிக்காக நிலுவையில் உள்ளது.
தமிழக காவல்துறை மக்களை அச்சுறுத்தி விவசாயிகளிடமிருந்து என்எல்சிக்காக
நிலத்தை பிடுங்குகிறது
திமுக இனி வரவே கூடாது. இன்னும் ஒரு முறை திமுக வந்தால் அவ்வளவுதான். அத்துடன் முடிந்து விடும் எல்லாம் ஊரை காலி செய்து கொண்டு போக வேண்டியதுதான் எனவே இந்த நிலை மாற வேண்டும் ஒரு மாற்றம் வேண்டும்” என பேசி முடித்தார்.