10வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்!
நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் இந்தியா கூட்டணியல் 35 தொகுதிகளிலேயே வெற்றி பெற முடிந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. அதே கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டியிட்ட சூழலில் 85 இடங்களில் வென்றது.
கடந்த 2020 போலவே இந்த முறையும் நிதிஷ்குமாரே முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக, தனது பதவியை ராஜினாமா செய்த அவர், மீண்டும் இன்று (நவ.20) முதலமைச்சராக பதவியேற்றார். இதன் மூலம் பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் 10-வது முறையாக பதவியேற்றுள்ளார். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக கூட்டணி முதலமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.