ஜூலை 27ல் நிதி ஆயோக் கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!
டெல்லியில் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
கடந்த ஜூலை 14ம் தேதி நிதி ஆயோக் 2023-24ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதன்படி நீடித்த நிலையான வளர்ச்சி குறியீடுகளில் பெரும்பாலானவற்றில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக நிதி ஆயோக்கின் SDG Index ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, வறுமை ஒழிப்பு என்பது சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து கொள்கை வகுப்பாளர்களிடையே பெரும் சவாலாகத் தொடர்கிறது. ஏராளமான வறுமை ஒழிப்புத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்திய பிறகும், பல்வேறு பகுதிகளில் வறுமை நீடித்தது.
ஆனால், 2015-16 மற்றும் 2019-21க்கு இடையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் வறுமையின் பிடியிலிருந்து தப்பியவர்களின் எண்ணிக்கை 13.55 கோடி என 2023-ல் நிதி ஆயோக் வெளியிட்ட தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டு அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் 2023-24 ஆண்டுக்கான நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் பிரதமராக நரேந்திர மோடி 3வது முறை ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும். இந்நிலையில், இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.