நிதி ஆயோக் கூட்டம் - மூன்று முதலமைச்சர்கள் புறக்கணிப்பு!
நிதி ஆயோக் கூட்டம் அதன் தலைவராக உள்ள பிரதமர் மோடி தலைமையில் இன்று(மே.24) நடைபெற்றது. டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.
நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தமுறை பங்கேற்காத முதலமைச்சர் பட்டியலில்,
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் அடங்குவர். இதில் சித்தராமையா முன் கூட்டிய நிகழ்வு காரணமாக பங்கேற்க இயலாமல் தனது உரையை மட்டும் கூட்டத்தில் வாசிக்க அனுப்பி வைத்தார்.
பினராயி விஜயன் அவருக்கு பதிலாக அம்மாநில நிதியமைச்சர் பாலகோபாலை கலந்துகொள்ள நியமித்தார். கடந்தாண்டு இவர் பங்கேற்கவில்லை. ரங்கசாமி நிதி ஆயோக் கூட்டத்தை தவிர்த்தது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மம்தா பானர்ஜி கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டதில் வெளிநடப்பு செய்தார். அப்போது அவருக்கு குறைந்த அளவே பேச அனுமதி கொடுக்கப்பட்டது. மேலும் இது குறித்து அவர், பேசும்போது மைக்ரோஃபோன் அணைக்கப்பட்டதாக கூறினார்.
இந்த முறை மம்தா பானர்ஜி பங்கேற்காதது குறித்து அக்கட்சி எம்.பி சவுகதா ராய் அளித்த பேட்டியில், “திட்டக் கமிஷனை மோடி அரசு நிதி ஆயோக் மூலம் மாற்றிய விதம் நெறிமுறையற்றது. அனைத்து மாநிலங்களும் பேச அனுமதிக்கப்படவில்லை. கட்சியின் தலைவர் என்ன சொன்னாலும் அது கட்சியின் முடிவுதான். கூட்டத்தை தவிர்த்த மம்தாவின் முடிவு சரியானது” என்று கூறினார்.