பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது நிதி ஆயோக் கூட்டம்!
நிதி ஆயோக் என்பது மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட ஒரு குழுவாகும். இந்த நிதி ஆயோக் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி செயல்பட்டு வருகிறார். நிதி ஆயோக் வட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பு நிதி ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே 24) தொடங்கியுள்ளது.
டெல்லியில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 23) டெல்லி சென்றார். இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை விடுவிக்க பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த இருக்கிறார்.
இதேபோல், பிற மாநில முதலமைச்சர்களும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்க உள்ளதாக தெரிகிறது. மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில்முனைவை அதிகரிப்பது, திறன் மேம்பாடு, தொடா்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, நாடு முழுவதும் பரவியுள்ள பலதரப்பட்ட வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரும் பங்கேற்கவில்லை. இதில் கர்நாடக முதலமைச்சர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பங்கேற்கவில்லை என்று தகவல் தெரிவிக்கிறது.