Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நிர்மலா சீதாராமன் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் இல்லை, நிதியும் தரவில்லை!" - கனிமொழி தாக்கு!

10:16 PM Apr 06, 2024 IST | Web Editor
Advertisement

நிர்மலா சீதாராமன் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் இல்லை, நிதியும் தரவில்லை கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisement

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து,  வேட்பாளர்களை அறிவித்து,  தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.  வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி நாலு முக்கு ரோடு பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது அவர் பேசியதாவது,

"கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் உள்ள பாஜக தேர்தல் அறிக்கையில் கூறிய ஏதாவது ஒரு வாக்குறுதியாவது நிறைவேற்றி இருக்கிறார்களா.  15 லட்சம் ரூபாயும் அக்கவுண்டில் வரவில்லை.  வருடத்திற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்தார்கள் ஆனால் கொடுக்கவில்லை. வேலை கேட்டால் பகோடா போடுங்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார். அதுவும் வேலைதான் என்கிறார்.

தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பு வந்த போது ஒரு ரூபாய் நிவாரணம் கொடுக்கவில்லை.  அனைத்து நிவாரணமும் கொடுத்தது நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கே வந்தார்.  வந்து மக்களைப் பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லை, மக்களுக்கு என்ன தேவை என்றும் கேட்கவில்லை.

மக்களுக்கு உணவு வேண்டுமா, நிவாரணம் வேண்டுமா என்பதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை.  இங்கு ஒரு பெருமாள் கோயில் உள்ளது.  நிதி அமைச்சர் அந்த கோயிலுக்குச் சென்று கோயிலை சுற்றி சகதியாக இருக்கிறது என்று அதற்கு ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் செய்து,  அதிகாரிகளை திட்டியுள்ளார்.  அந்த கோயிலுக்கு வந்தவர்களிடம் இனிமேல் இங்கே இருக்கக்கூடிய பூசாரியின் தட்டில் காசு போடுங்கள், கோயில் உண்டியல் காசு போடாதீர்கள் என்று சொல்லி விட்டு போனார்கள். தமிழ்நாட்டிற்கு நிதி கொடுப்பார் என்று பார்த்தால் இன்றைக்கு வரைக்கும் ஒரு ரூபாய் நிதி வரவில்லை.

இந்திய எல்லையில் சீன அரசு ஒரு சில கிராமங்களை கைப்பற்றி விட்டதாக தெரிவித்து, சீன மொழியில் அந்த பகுதிகளுக்கு வந்து பெயர் பலகை வைத்துவிட்டு சென்றது.  இந்தியாவே பெரும் பரபரப்பாக பேசப்படும் நிலையில் சீன நாட்டின் நடவடிக்கைக்கு எதிராக பிரதமர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.  இந்திய எல்லையையே காப்பாற்றுவதற்குப் பிரதமருக்கு முடியவில்லை.  இது மக்களுக்கான ஆட்சி இல்லை.

நமது திமுக ஆட்சி வந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு 20 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.  நாடாளுமன்றத் தொகுதி நிதியிலிருந்து பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது.  சவக்கிடங்கு சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.  30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  தினசரி காய்கறி சந்தை சரி செய்யப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  மழை, வெள்ளத்தில் ரயிலில் மாட்டிக்கொண்ட மக்களுக்கு உதவி செய்தவர்கள் இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள்.  நமது முதலமைச்சர் இந்த ஊர் மக்களின் மகத்தான உதவியைப் பாராட்டினார்."

இவ்வாறு தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி பேசினார்.

Tags :
DMKElection2024Elections with News7 tamilElections2024Kanimozhi
Advertisement
Next Article