தேயிலை விவசாயிகளின் நிலுவைத்தொகை பாக்கி - அனைத்து கட்சிகள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு!
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய, நிலுவைத் தொகையை உடனே வழங்காவிடில், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அனைத்து கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலை மாவட்டமான நீலகிரியில் முக்கிய பணப்பயிராக தேயிலை விவசாயம்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகப்படியாக தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டாலும் பசுந்தேயிலையை தூளாக தயாரிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடம் இருந்ததால் விவசாயிகளுக்கு குறைந்த விலையே கிடைத்தது.
இதனை கருத்தில் கொண்டு தேயிலை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படா வண்ணம்,
அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை உருவாக்கியது. இதன் மூலம் 16 அரசு
கூட்டுறவு தொழிற்சாலைகள் நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த தேயிலை
தொழிற்சாலைகளில் நாள்தோறும் சுமார் 10 லட்சம் கிலோ பசுந்தேயிலையில் இருந்து டீ
தூள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் தேயிலை வாரியம் சார்பாக, விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு இவ்வளவு ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாத விலை நிர்ணயமாக, பசுந்தேயிலை கிலோ ஒன்றிற்க்கு ரூ.24 வரை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், தேயிலை
விவசாயிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பலமுறை தேயிலை வாரியத்திடம் முறையிட்டும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. இதனால் 50 லட்ச கிலோ பசுந்தேயிலை வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.1.50
கோடி வரை இழப்பு ஏற்ப்படுள்ளது. இந்நிலையில் அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேயிலை விவசாயிகளுக்கான அக்டோபர் மாத நிலுவைத்தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். இல்லையென்றால் டிச. 22-ஆம் தேதிக்கு பிறகு சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அனைத்து கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.